சென்னை:இந்து சமய அறநிலையத் துறையின் வளர்ச்சி குறித்த கலந்தாய்வு கூட்டம் இரண்டு நாட்களாக (மே 20, மே 21) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் குமரகுருபன், கூடுதல் ஆணையாளர் கண்ணன் மற்றும் திருக்கோயிலில் இணை, துணை, உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "இதுவரை 620 திருக்கோயில்களில் 666 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 2,417 திருக்கோயில்களில் ரூ.1,301.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 2000 கோயில்களில் ரூ. 40 கோடி மானியமாக வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு ரூ. 3 கோடியாக இருந்த மானியம் ரூ.6 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடியாக இருந்த மானியம் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
'ஆத்திகர்களும், நாத்திகர்களும் போற்றக்கூடிய அரசாக இருக்கும்' - அமைச்சர் சேகர்பாபு திருக்கோயிலின் நிலத்தை மீட்டு அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அதில் வரும் வருமானத்தை திருக்கோயிலுக்கே பயன்படுத்தப்படும். கோயில்களில் இருக்கின்ற தங்கத்தை உருக்கி அதை வைப்பு நிதியாக வைத்து அதன்மூலம் திருப்பணிகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் அனைத்தையும் நடத்தி, திருப்பணிகளுக்கும் குடமுழுக்கிற்கும் போற்றக் கூடிய காலமாக இருக்கும். பட்டணப் பிரவேசத்திற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கோயில் நிலங்களை மீட்பதற்கான ஆணைகள் பிறப்பித்து இருக்கிறோம். கோயில்களில் வருவாயை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நாங்கள் அண்ணாமலையை விட பக்தியில் முழு ஈடுபாடுடன் இருப்பவர்கள். பக்தியை வைத்து அரசியல் செய்யும் நிலையில் இல்லாதவர்கள். மதத்திற்கு அப்பாற்பட்டு அவரவர் விரும்பிய கோயில்களை வழிபட அரசு ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறது. பல்லக்கு தூக்குவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம்.
விமர்சனங்கள் எங்களின் பயணத்திற்கு தடைக்கல்லாக இருக்காது. ஆத்திகர்கள், நாத்திகர்கள் போற்றக்கூடிய அரசாக இருக்கும் என்பதற்கு பெயர் தான் திராவிட மாடல் அரசு. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராஜா அண்ணாமலைப்புரத்தில் வீடுகள் அகற்றப்படுகிறது. சென்னையில் பசுமடம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். சிதம்பர நடராஜர் கனகசபை தரிசனம் நடைமுறையில் இருந்ததுதான். கனகசபை தரிசனம் நடைபெற்று அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். கூடிய விரைவில் துறை சார்பாக நானும் செயலாளர் ஆணையாளர் கனகசபை ஏறி நடராஜரை தரிசனம் செய்ய இருக்கிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: உதயநிதிக்கு பேனர் வைத்த காவலர்