சென்னை:ஐஐடியின் டிஸ்கவரி வளாகத்தில் துறைமுகங்கள், நீர்வழிகள், கடற்கரைகளுக்கான தேசியத் தொழில்நுட்ப மையத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திறந்து வைத்தார். துறைமுகங்கள், நீர்வழிகள், கடற்கரைகளுக்கான தேசியத் தொழில்நுட்ப மையம் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதற்காக செயல்பட்டு வருகிறது.
துறைமுகம், கடலோர மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, அவற்றுக்கான பொறியியல் அம்சங்களில் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டுத் தயாரிப்புகளை உருவாக்கி, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரைவான கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துவதும், மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
இந்த தேசியத் தொழில்நுட்ப மையத்தின் தொடக்க விழாவில் துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசும்போது, “வண்டல்மண் போக்குவரத்து, வழிகாட்டல், அகழ்வு மற்றும் வண்டல்மண் துறைமுகம் மற்றும் கடலோரப் பொறியியல், தன்னாட்சி செயல்பாடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாணவர்கள், தொழில்துறையினர், கல்வியாளர்களுக்கு பயன்படும் வகையில் பிரத்யேகமான ஒருங்கிணைந்த மையமாக இந்த மையம் செயல்படுகிறது.
முக்கிய துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து, அணுசக்தி, மாநில கடல்சார் வாரியங்கள், ஏஎல்எச்டபிள்யூ, கடற்படை, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில முகமைகள் உள்பட பல்வேறு அமைப்புகளுக்காக இதுவரை 100க்கும் மேற்பட்ட திட்டங்கள், தயாரிப்புகள் ரூ.200 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தயாரிப்புகளால் உறுதியான பலன்கள் கிடைத்திருப்பதுடன், ரூ.1,500 கோடி அளவுக்கு செலவினங்கள் மிச்சமாகியுள்ளன. பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் சரியான திசையில் பயணிக்கிறது என்பதற்கு இது ஒரு படியாகும். துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து, கடல்சார் தகவல்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆய்வகம் போன்றவற்றுக்காக பெரிய அளவிலான ஆழமற்ற நீர்வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் iVTMS, மின்-வழிகாட்டல் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, “தேசத்திற்கு சேவையாற்றுவது நம் எல்லோரின் கடமையாகும். உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் துறைமுகங்கள், நீர்வழிகள், கடற்கரைகளுக்கான தேசியத் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக மட்டும் ரூ.1,500 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.
கடற்படை தொடர்பான அனைத்து ஆராய்ச்சி மற்றும் நவீன மேம்பாட்டுத் திட்டங்களில் நிஜமான வரிசைப்படுத்தலை எதிர்நோக்கி உள்ளோம். ஐரோப்பா உட்பட உலகின் சிறந்த நிறுவனங்களுடன் இதனை ஒப்பிடலாம். முன்னோடியாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டுவோராகவும் எங்களை நிலைநிறுத்திக் கொள்கிறோம். இந்த முழு அமைப்பும் இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்டதாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், அவர் குறிப்பிட்டபடி ‘அம்ரித் கால்’ எனப்படும் அடுத்த 25 ஆண்டுகளை நோக்கி பயணிக்கிறோம் சுதந்திரத்தின் நூறாவது ஆண்டை நாம் அடையும்போது ஆத்மநிர்பர் இந்தியா திட்டத்தின்கீழ் கடல்சார் துறையில் தன்னிறைவு அடைந்திருக்க வேண்டியது அவசியம். கடல்சார் துறையில் நாம் மேலும் பயணிக்க இது நிச்சயம் முக்கிய படியாகும்” என்றார்.
இதையும் படிங்க: மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்யலாம் - வானதி சீனிவாசன் காட்டம்