சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வாழ்க்கையை தொலைத்து அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, இது வரைக்கும் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர். இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மேலும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே பேசும் பொருளானது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் முறையிட்டனர்.
முன்னதாக, இளைஞர்களை லாவகமாக வலையில் சிக்க வைத்து, அவர்களை ஏமாற்றி பணம் பறித்து உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கும் விதமாக, கடந்த அதிமுக ஆட்சியில், 2020ஆம் ஆண்டில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து ஆன்லை சூதாட்டம் நிறுவனங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு, உயர்நீதி மன்றம் தடை விதித்தது.
இதை ஏற்காத தமிழ்நாடு அரசு, சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் பின் 2021ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த திமுக அரசு, இதனை ஆராயும் விதமாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைத்தது. அந்த குழு ஜூன் மாதம் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டம் தடை அவசரச் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், அக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்திற்கு, உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்கள் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அதில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு, மூன்று மாத சிறை, ரூ. 5,000 அபராதமும், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்குப் பணம் அல்லது பொருட்கள் வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை, ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.