தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இந்தியாவுக்கு முன்மாதிரி, ஆளுநருடன் விவாதிக்கத் தயார்" - அமைச்சர் ரகுபதி!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 2வது முறையாக இயற்றி அனுப்பும் போது ஆளுநர் திருப்பி நிராகரிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

“இந்த முறை வாய்ப்பே இல்லை” - ஆன்லைன் ரம்மி குறித்து அமைச்சர் ரகுபதி
“இந்த முறை வாய்ப்பே இல்லை” - ஆன்லைன் ரம்மி குறித்து அமைச்சர் ரகுபதி

By

Published : Mar 10, 2023, 10:28 AM IST

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இணைய வழி சூதாட்டங்களை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகள் முறைப்படுத்துதல் தொடர்பாக சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநர் சில சந்தேகங்களை கேட்டபோது நானும், உள்துறை, சட்டத்துறைச் செயலாளர்கள் இணைந்து தெளிவான விளக்கத்தை தந்திருந்தோம். ஆனால் கடந்த 6ஆம் தேதி சட்டப்பேரவையில் இந்த சட்டத்தை இயற்றுவதற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

சட்டமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருப்பதாக நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆனால் இன்றைக்கு, ஆளுநர் சட்டமன்றத்திற்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்கிறார். இது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ஆன்லைன் கேம், ஆஃப்லைன் கேம் என இரண்டையும் தெளிவுபடுத்தி உள்ளோம். ஆஃப்லைன் கேமில் தவறு நடப்பதற்கு வழி இல்லை.

ஆனால் ஆன்லைனில் புரோகிராமர், புரோகிராமை செட்டப் செய்கிறார். அவர் எந்த கார்டை வேண்டுமானாலும் மாற்றி வைக்கலாம். எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். எனவே இது தடை செய்யப்பட வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வந்தபோதே, தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளோம்.

ஆனால் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியதை, மீண்டும் சட்டமன்றத்தில் சட்ட முன் வடிவை தாக்கல் செய்து நிறைவேற்றி, அதனை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் குழுவை அமைத்து பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, கிட்டத்தட்ட 95 சதவீதம் பேரின் ஆதரவோடுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை 2வது முறை இயற்றி அனுப்பும்போது ஆளுநர் திருப்பி நிராகரிப்பதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா பொதுமக்களின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது. ஆளுநர் கேட்ட கேள்விகளுக்குத்தான் நாங்கள் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டின் ஆளுநர் அண்ணாமலையா? ஆர்.என்.ரவியா? ஆளுநர் என்ன விளக்கம் கேட்டார் என அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? ஆளுநர் அண்ணாமலையிடம் சொன்னாரா?.

இந்த ரகசியங்களை எல்லாம் ஆளுநர் அண்ணாமலையை அழைத்து விவாதித்தாரா? ஆன்லைன் சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பிறகு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கெல்லாம் யார் பொறுப்பு? இது குறித்து எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார்.

ஆன்லைன் ரம்மி இந்தியா முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான். தமிழ்நாடு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் தடை செய்ய வேண்டும். எந்த மாநிலத்திலாவது புகார் கொடுத்தவர்களை ஆளுநர் சந்தித்து பேசியது உண்டா?" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம்: மாநில அரசை கட்டுப்படுத்துகிறதா மத்திய அரசு?

ABOUT THE AUTHOR

...view details