சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், "எதிர்வரும் இந்தப் புயலை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டுதல்களை முதலமைச்சர் வழங்கி உள்ளார். வடகிழக்குப் பருவமழை காலத்தில் உருவாகும் புயல்களைப் பாதுகாப்பாக எதிர்கொண்டுவருகிறோம்.
நீர் தேக்கங்களைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதிவரை மழை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள ஏழாயிரத்து 605 ஏரிகளில், 979 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
அவற்றைக் கண்காணித்து உபரிநீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகளை நம்ப வேண்டாம். மாற்று கருத்துடைய எதிர்க்கட்சிகள், கடந்த கால புகைப்படங்களை வைத்து மக்களை அச்சுறுத்திவருகின்றன.