சென்னை:மருத்துவக் குணம் கொண்ட பதநீரை மூலப் பொருளாகக் கொண்டு பனை வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனை வெல்ல சாக்லேட் மற்றும் பனம் பழங்கூழ் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில், கதர் மற்றும் பனை வாரியத்தின் (Khadar and Palm Board in TN) செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று (டிச.27) நடந்தது. இக்கூட்டததில் கதர் வாரியத்தின் நோக்கங்கள், தொழில்களின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பான புள்ளி விவரங்களுடன் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் அவர்களால் காட்சி வழியாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டன.
ஆய்வின் போது பேசிய அமைச்சர், 'ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் பொதுமக்கள், பணிக்கு செல்லும் பெண்கள் ஆகியோரை கவரும் வகையில் புத்தம் புது வடிவமைப்புகள், வண்ணங்களில் காட்டன் புடவைகள், பட்டுப்புடவைகள் மற்றும் ஆண்களுக்கான உடைகள் ஆகியவற்றை தொடர்ந்து தயாரித்து விற்பனை செய்யவேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
கதர் வாரியத்திலுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நூற்பு, நெசவு பணிகளை செயல்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. கிராமத்தொழில் பொருட்களில் சோப்பு வகைகள், அலுவலக தளவாட பொருட்கள், தோல் காலணிகள், பூஜை பொருட்கள், அகர்பத்திகள் மற்றும் தேன் வகைகளுக்கு நல்லதொரு சந்தை வாய்ப்பு உள்ளதால் இதன் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் மதிப்புக்கூட்டு தேன் பொருட்கள், பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானியங்கள் ஆகியவைகள் மக்களைக் கவரும் வண்ணம் இருப்பதால் இதன் உற்பத்தியை அதிகப்படுத்தி விற்பனையை விரிவுபடுத்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
ரூ.30.61 கோடிக்கு கதர் பொருட்கள் விற்பனை: 2020-21ஆம் ஆண்டில் ரூ.38.65 கோடி மதிப்பிலான கதர் கிராமப் பொருட்களும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.47.06 கோடி மதிப்பிலான கதர் கிராமப் பொருட்களும், நடப்பு 2022-23ஆம் ஆண்டில் ரூ.60.00 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்ததில், நவம்பர் 2022 வரை ரூ.30.61 கோடி மதிப்பிலான கதர் கிராமப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விற்க ஏற்பாடுகள் தீவிரம்:இந்த நிதியாண்டிற்கான விற்பனை இலக்கினை கண்டிப்பாக எய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இளைஞர்களை கவரும் நோக்கில் தற்போதைய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி இணையதள விற்பனை மற்றும் தனியுரிமை கிளைகளுக்கான உரிமங்களை வழங்கி விற்பனையை அதிகரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000: ஒன்றிய அரசின் திட்டமான பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் இலக்கான ரூ.30.53 கோடியை தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கி, இவ்வருட இலக்கினை அடைய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களின் இன்னல்களை போக்கிட மழைக்காலப் பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5,000 வீதம் நடப்பாண்டில் 11,676 நபர்களுக்கு ரூ.5.84 கோடியை விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.