தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்க அனுமதியுங்கள் - அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் - approve bills

நீண்ட காலம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரியும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்கக்கோரியும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம்

By

Published : Jul 5, 2023, 3:12 PM IST

சென்னை:அதிமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை விசாரிக்கவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் இன்றும் நிலுவையில் உள்ள நிலையில் அதனை காலம் கடத்தாமல் ஒப்புதல் அளிக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்தது.

மேலும், இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது. அதில் மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அனுப்பியது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்விதப் பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை.

இதையும் படிங்க:பொது சிவில் சட்டம்; அதிமுகவின் நிலைப்பாடு; 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இருப்பது என்ன?

இதே போன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

அத்துடன் முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை வழங்கவில்லை. ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.

இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட இசைவு ஆணையையும் மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி வழக்கு - 3 வது நீதிபதி நியமனம்

ABOUT THE AUTHOR

...view details