இது குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், "தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சராசரியாக 252.2 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. இது சராசரியான அளவைவிட 28 விகிதம் அதிகமாக உள்ளது.
அதேபோல் பவானி சாகர், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சானி, பெரியாறு, வைகை, சாத்தனூர் பரம்பிக்குளம், அமராவதி, மற்றும் திருமூர்த்தி அணைகளில் கடந்த ஆண்டை விட நீரின் கொள்ளளவு கிடைத்திருக்கிறது.
ஆனால் மேட்டூர், பாபநாசம், கிருஷ்ணகிரி, சோலையார் அணையில் நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீரின் இருப்பு கொள்ளளவு கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.
தற்போது நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை அண்டை மாநிலங்களிலிருந்து நீர்வரத்து அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கூடுதலாக நீர் கிடைக்கும் என தெரியவருகிறது.
இதேபோன்று, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடம் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மழைக்கால தொற்று நோயான டெங்கு, மலேரியா உள்ளிட்டவற்றை தடுக்கும் பணிகளில் மேற்கொள்ளும் படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும். இதனால் வெள்ளத் தணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முடிவடைந்துள்ளன. நீர் தேங்கும் இடங்களை கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கென தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.