தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிதி வேண்டுமென்றால் பல கேள்விகளை கேட்போம்' - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு - அமைச்சர் பிடிஆர்

பல்கலைக்கழகத்திற்கு நிதி வேண்டுமென்றால் பலவகையான கேள்விகளை முன் வைப்போம், அதற்கு சரியான பதில்களை கொடுத்தால் மட்டுமே நிதி கொடுப்போம் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
Etv Bharat அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

By

Published : Jan 27, 2023, 4:08 PM IST

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னைபல்கலைக்கழகத்தில், ஜனநாயகம் மற்றும் சமூக நீதி தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, “திமுக அரசு பதவியேற்கும்போது, பல்வேறு நிதி நெருக்கடியில் இருந்தது. ஆனால், அதை எல்லாம் சரி செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறையை குறைத்தோம், இந்த ஆண்டும் கணிசமான அளவிற்கு வருவாய் பற்றாக்குறை குறையும். நிதி வேண்டும் என்றால் அது தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைப்போம், அதற்கு சரியான பதில்கள் கிடைத்தால் மட்டுமே நிதி கிடைக்கும்.

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக, நீதிக்கட்சி தொடங்கி தொடர்ந்து பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கல்வி அறிவு வளர்வதற்கு, மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்கும் வகையில், காமராஜர் அத்திட்டத்தினை கொண்டு வந்து செயல்படுத்தினார். சமூகநீதியில் நீதிக்கட்சி மட்டும் இல்லாமல் தேசிய அளவில் காங்கிரஸுக்கும் பங்கு உள்ளது.

சமூக நீதி கொள்கையால் தான் உயர்கல்வி, மருத்துவத்துறை, உற்பத்தி எனப் பல நிலைகளில், குஜராத்தை விட தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது. சமூக நீதிக் கொள்கையின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக நீதி கோட்பாடுகளை நீண்ட கால அளவில் அது ஏற்படுத்தும் பலன்களை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அப்போதுதான் சமூகத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணர முடியும்” என்றார்.

முன்னதாக பேசிய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, “பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. இதிலிருந்து பல்கலைக்கழகம் மீள்வதற்கு நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் அமைச்சர் கருத்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏழுமலை, 'அமைச்சர், நிதி நிர்வாகத்திலும், மேலாண்மையிலும் அனுபவம் வாய்ந்தவர். முன்னணி கல்வி நிறுவனங்களில் படித்தவர். அவருடைய அனுபவம் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதால், சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாக மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது வகுப்புகள் எடுக்க அமைச்சர் முன்வர வேண்டும்' எனத் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது பத்து நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டது. மீண்டும் மேடையில் பேசத் தொடங்கிய அவர், 'தமிழ்நாட்டில் தற்போது மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை' என்றார். மேலும், 'ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் ஒன்று பார்க்க முற்படும்போது மின்தடை ஏற்படுத்தப்பட்டது. அதேபோல இன்று நாம் சமூகநீதி குறித்து பேசும்போது மின்தடை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ' என நகைச்சுவைடன் பேசினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கான புதிய வலைதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ABOUT THE AUTHOR

...view details