சென்னை:சட்டப்பேரவையில் இன்று ( மார்ச் 30 ) நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தொண்டாமுத்தூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அட்சய பாத்திரம் என்ற திட்டமாக அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தியதாக பேசினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்ததாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018-19 வரை ரூபாய் 50 லட்சம் பணம் தணிப்பட்ட நிதி (discretionary fund) ஆக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2019 ஆம் ஆண்டுக்கு பின் திடீரென 50 லட்சத்தில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி தனிப்பட்ட அதிகாரம் (Discretionary power) என்ற பிரிவில் 50 லட்சத்தை 5 கோடி ரூபாயாக ஆக்கியுள்ளனர். அந்த கணக்கை ஆய்வு செய்ததில், 5 கோடியில் 4 கோடி ரூபாயை அட்சய பாத்திரம் திட்டத்துக்கு தனியார் அமைப்புக்கு கொடுத்துள்ளனர்.
பூண்டு, வெங்காயம் சேர்க்காத அது ஒரு அமைப்பு. அவர்கள் வழியில் செய்யக்கூடிய உணவை, அது சத்து உணவு கூட இல்லை. அரசு இடத்தை வைத்து, அரசு பணத்தை வைத்து, நம் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக பணத்தை எடுத்திருக்கின்றனர். மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் ஆளுநர் மாளிகை கணக்குக்கு கண்ணுக்கு தெரியாத கணக்கில் மாற்றப்பட்டுள்ளது.
மீண்டும் அடுத்தாண்டு 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு கோடி ரூபாய் அட்சய பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. 4 கோடி ரூபாய் வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது. பிறகு அத்திட்டமே நின்று போனது. ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் அரசு கணக்கில் இருந்து எடுத்து வேறு கணக்கிற்கு செலுத்தியுள்ளனர்.