சென்னை: பொறியியல் படிப்பிற்கான 4 ஆம் சுற்று கலந்தாய்வின் நிலவரங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவ. 8) வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடைபெறும் நான்கு சுற்று கலந்தாய்வில் 3 ஆம் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ளது.
தற்போது 4 ஆவது சுற்று கலந்தாய்வு வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3 சுற்று கலந்தாய்வு முடிவுகளில் 89,585 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 10,000-ம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். துணைக் கலந்தாய்வின் போது குறிப்பிட்ட கல்லூரிகளில் விதிகளை மீறி உதவித் தொகைக்காக மாணவர்களை சேர்த்தது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள 4,000 இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாது.