சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை இன்று(ஏப்ரல் 25) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொண்டு வந்தபோது அதிமுக உறுப்பினர்கள் வேறு காரணம் கூறி வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசும் போது, "முதலில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. தற்போது அதிமுகவினர் வேறு காரணம் கூறி வெளிநடப்பு செய்துள்ளனர். சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தால் என்னவாகும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் வேறு காரணம் கூறி வெளிநடப்பு செய்துள்ளனர். பாஜகவுக்கு ஜய்ங் ஜக் ஜால்ரா அடிப்பவர்கள் அதிமுகவினர்.
அண்ணாவின் பெயரில் உள்ள கட்சி, மாநில சுயாட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதில் இருந்தே அவர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ளலாம். குஜராத், தெலங்கானா, கர்நாடகா போல் இங்கும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குஜராத்தில் ஏன் இப்படி சட்டம் உள்ளது? என்று அதிமுகவினர் மோடியைத் தான் கேட்க வேண்டும்.
கல்வித்துறையில் ஆளுநர் - அரசுக்கு இடையே உள்ள பிரச்னைகளை தீர்க்கவே முதலமைச்சர் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார். இதை எதிர்த்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னதைக்கூட கேட்காமல், மாநில சுயாட்சிக்கு விரோதமாக அதிமுகவினர் செயல்பட்டுள்ளனர்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!