அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று, பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.
அதன் முதல் நாளான இன்று, சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மண்டல கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்தப்பின்னர், பணி ஆணையை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
”முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்காக 318 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 76 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. 1,895 கௌரவ விரிவுரையாளர் பணிக்காக 9,915 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 20 மாத திமுக ஆட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 1,895 பேர் கௌரவர் விரிவுரையாளர்களை நியமிக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இடஒதுக்கீடு எல்லாம் சரியாகப் பின்பற்றப்படவில்லை.
1,895 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்குப் பெறப்பட்ட விண்ணப்பங்களில், PHD, JRF மற்றும் NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதுமிருந்து தகுதியின் அடிப்படையில், கௌரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 9,915 விண்ணப்பங்களுக்கும் படிப்பு தகுதியின் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவினருக்கு, நாளை முதல் தரவரிசையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டுப் பணி ஆணை வழங்கப்படும். நாளை முதல் பொதுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெற உள்ளது.
கேரளா மற்றும் பாண்டிச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போல, தமிழ்நாட்டில் நியமிக்கப்படும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் நிதி நிலைமைக்கு ஏற்ப பின்னர் சம்பளம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்களை அடுத்த ஆறு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்குத் தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர்களை, பல்கலைக்கழக மானிய குழு (UGC) அழைத்து விவாதித்தாலும் அதில் பயனில்லை. தமிழ்நாட்டிற்கென மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முதலமைச்சர் குழு அமைத்துள்ளார், அவர்கள் அளிக்கும் அறிக்கை பெறப்படவுள்ளது. முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:TET Paper 2: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேதி அறிவிப்பு!