சென்னை:கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கலந்துக் கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள், கட்டுரை போட்டிகள், வினாடி வினா போட்டிகள், கவிதை போட்டிகள் போன்றவை கல்லூரி அளவில் நடைபெற உள்ளது. கல்லூரியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலும், மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
முதல் துணை வேந்தர் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற பாடங்களில் 75 விழுக்காடு பாடத்திட்டங்களை ஒரே மாதிரியாக கடைபிடிக்க வேண்டும். 25 விழுக்காடு பாட திட்டங்களை மட்டும் பல்கலைக் கழகங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். ஒரு சில பல்கலைக் கழகங்களில் புதிதாக தொடங்கப்பட்ட பாடங்களுக்கான பாடத்திட்டங்களும் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.
2023-2024ஆம் கல்வியாண்டில் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வருடம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பாடக்குழுவின் ஒப்புதலோடு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான பாடத்திற்கு துணை வேந்தர்கள் ஆதரவு அளித்துள்ளனர். பல்வேறு நாடுகளின் பாடத்திட்டங்களை ஆராய்ந்து பொது பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடப் பிரிவுகள் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
பொதுப் பாடத்திட்டம் குறித்து தன்னாட்சிக் கல்லூரிகளின் நிர்வாகிகளையும் அழைத்துப் பேசவுள்ளோம். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பாடத்திட்டங்கள் மாணவர்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தரவரிசை வழங்கும் நடைமுறையை பின்பற்ற உள்ளோம்.