சென்னை: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா நேற்று (மே.13) நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி,"நாங்கள் மொழிகளுக்கு எதிரானவர்கள் இல்லை, இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்பு வேண்டாம் என்பதையே கவர்னரின் கவனத்திற்கு சொல்கின்றோம். எந்த மொழியையும் கற்க தயாராக இருக்கிறோம். அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். சர்வதேச மொழியான ஆங்கிலமும், தாய் மொழியான தமிழ் மொழியும் எங்களிடம் இருக்கிறது" என தெரிவித்தார்.
இந்தி திணிப்பிற்கு அண்ணா சொல்லிய குட்டி கதையை கூறிய பொன்முடி. இந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விசயங்களைப் பின்பற்றத் தயாராக இருக்கின்றோம். தமிழ்நாடு அரசு மாநில கல்வி கொள்கையை பின்பற்றுகின்றோம், இந்தி தேர்வு மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு" என்று பேசி இருந்தார்.
இந்தநிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் பானிபூரி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற பேச்சு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வட மாநிலத்திற்குச் சென்று வேலை செய்கின்றனர். அவர்களும் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்கின்றனர். வேலை வாய்ப்பு கிடைக்காததால்தான், இங்கு வேலைக்கு வந்துள்ளார்கள் என்ற அர்த்தத்தில் கூறினேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் விழாவில் பத்திரிகையாளர்களுக்குப் பணவிநியோகம் - எரிச்சல் அடைந்த பத்திரிகையாளர்கள்!