சென்னை: காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.01) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "நாளை மதுரையில் நடைபெற உள்ள காமரஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறேன். சங்கரய்யாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. சங்கரய்யாவை பற்றி ஆளுநருக்கு தெரியவில்லை என்றாலும், அவரை பற்றி கேட்டு தெரிந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார். மேலும் பலமுறை போராட்டங்கள் நடத்தி 4 ஆண்டுகள் என மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளார். சுதந்திரப் போராட்ட வீரருக்கு, 102 வயதிலும் மக்களுக்கு குரல் கொடுத்து வருபவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்காமல் ஆளுநர் நிராகரித்துள்ளார். ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை" என்று காட்டமாக கூறினார்.
மேலும் பேசிய அவர், "சமூக நீதி பேசுபவர்களை ஆளுநருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் பட்டம் கொடுக்க கூடாது என்று நினைக்கிறார். சங்கரய்யாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆளுநர் விளக்க முடியுமா?" என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
"நடிப்பு சுதேசியாக ஆளுநர் இருப்பது வருந்தத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவிற்கு ஆதரவாக தான் ஆளுநர் இவ்வாறு நடந்துக்கொள்கிறார். ஆளுநர் ஒரு nominal executive, ஆனால் மாநில அரசு real executive. தமிழக அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதை செய்ய வேண்டியவர் தான் ஆளுநர்" என்று கூறினார்.