சென்னை :கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு (Study leave) ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.“இதனைப் பயன்படுத்தி நன்றாகப் படித்து நேரடித் தேர்வு எழுத தயாராகிக் கொள்ள வேண்டும். ஆன்லைன் தேர்வு முறை தரமானதாக இருக்குமா? என்பது சந்தேகம்தான். நேரடித் தேர்வு முறைதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நன்றாக இருக்கும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, ஜனவரி 21ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்தது.
இந்நிலையில், இன்று(ஜன.10) தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி,”தமிழ்நாட்டில் 3ஆவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் காலவரையின்றி தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. கரோனாவின் தாக்கத்தை பொறுத்து தேர்வு நடத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
அனைத்து கல்லூரிகளுக்கும் தேர்வுக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை மீறி கல்லூரிகள் செயல்பட்டால் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி திறப்பு குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்”என தெரிவித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடு? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!