சென்னை:உயர் கல்வித்துறைஅமைச்சர் பொன்முடி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உயர் கல்வித்துறை அமைச்சர், கடந்த 2021, ஆகஸ்ட் 26 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை தமிழ்நாடு அரசு மதித்து அங்கீகரிக்கிறது.
மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும். பாடப்பிரிவுகளுக்கு இடையே 75 சதவீதம் இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணை பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
2018 - 2019க்குப் பின், சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படவில்லை. இதை ஈடு செய்யும் வகையில், இந்த மாதிரிப் பாடத்திட்டம் (2023-2024) மிக தரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் உயரிய நோக்கம் கல்வியாளர்களிடையே சரியாக சென்றடையும் பொருட்டு இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பிற்கிணங்க 2021, செப்டம்பர் 30 மற்றும் அதே ஆண்டி நவம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற சட்டம் 1992 பிரிவு 10 (2) (H) விதியின்படியும், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 922 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள்) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, தொழில் முனைவு மற்றும் திறன்மேம்பாட்டு அம்சங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இம்மாதிரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தொழில் துறை வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து வளர்ந்து வரும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப B.Sc. Artificial Intelligence, B.Sc. Internet of things, B.Sc. Computer Science, Artificial Intelligence and Machine Learning, B.Sc. Computer Science with Block Chain Technology, B.Sc. Computer Science with Augmented Reality and Virtual Reality போன்ற பல புதிய மாதிரிப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களைப், பல்கலைக்கழக பாடத்திட்டக்குழுக்களின் (Board of Studies) ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைத்தன. இதன் அடிப்படையில், 90 சதவீத உயர்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் ஐந்து பிரிவுகள் இடம் பெற்றுள்ளன; பகுதி I மொழி, பகுதி II ஆங்கிலம், பகுதி III முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்கள், பகுதி IV திறன் மேம்பாட்டுப் பாடங்கள், பகுதி V மதிப்புக் கூட்டுக்கல்வி.