தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியின் வருமானத்தை தனது வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளது - அமைச்சர் பொன்முடி தரப்பில் வாதம்! - chennai

Minister Ponmudi: அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் பொன்முடியின் வழக்கு விசாரணை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடியின் வழக்கு விசாரணை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 8:07 AM IST

சென்னை:பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நிலையில், அதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையூட்டு மனு நேற்று (நவ.16) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுவித்து 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்பட லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களைத் தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான், 39 சாட்சிகளை விசாரித்ததாகக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இந்நிலையில், வழக்கில் வாதங்கள் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன், நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details