சென்னை: இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அங்கப்பன் நாயக்கன் தெரு சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாட்டினையும், வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்து, எஸ்.எஸ்.புரம் பிரக்ளின் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார்.
இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலம், மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாட்டினை இன்று (ஆகஸ்ட்- 28) பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்து, அந்தப் பள்ளியில் உணவருந்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டு, அவ்விடத்தில் சென்னை உருது நடுநிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.96 லட்சம் மதிப்பில் 3,587 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பள்ளியில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மேலும் கூடுதலாக புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்து பணியினை தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
மழைநீர் வடிகால் பணிகள்:இதனைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-75க்குட்பட்ட எஸ்.எஸ்.புரம் பிரக்ளின் சாலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.3.73 கோடி மதிப்பில் 972.70 மீட்டர் நீளத்தில் புதிதாக கட்டப்பட உள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பருவமழையின் போது, மேடவாக்கம் குளக்கரை சாலை, செக்ரேட்டரி காலனி 6ஆவது தெரு, எஸ்.எஸ்.புரம், பி.பிளாக் 1, 2 மற்றும் 7ஆவது தெரு, எஸ்.எஸ்.புரம் பிரதான தெரு ஆகிய தெருக்களில் மழைநீர்த் தேக்கம் காணப்பட்டது. இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காணும் வகையில், இந்தத் தெருக்களுக்கு புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்க பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, "சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் மழை நீர் தேங்கிய இடங்களில் எல்லாம் தற்போது மழைநீர் தேங்காது வண்ணம் மழைநீர் வடிகால் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று(ஆகஸ்ட் 28) திரு.வி.க.நகரில் இன்று தொடங்கப்பட்டது.
இந்த பணிகள் ஐந்து மாதங்களில் முடிக்கப்படும். மேலும் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை, வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் பருவ மழை தொடங்கும் முன் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் சில இடங்களில், பணிகளானது தற்போது தான் தொடங்கி இருக்கிறோம், மழை நீர் வடிகால் பணி என்பது மிகப்பெரிய பணி. அதனை விரைவில் முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது". என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை காவல் நீட்டிப்பு!