தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிநீதிபதியின் கருத்து அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் - அமைச்சர் சேகர்பாபு மேல்முறையீடு

Minister PK sekar babu: அமைச்சர்களை குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Minister PK sekar babu appeal in Madras high Court
அமைச்சர் சேகர்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 9:48 PM IST

சென்னை: திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 'சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது, திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

அந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் கடமை தவறிவிட்டனர் எனவும், இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

விளக்கம் கேட்காமல் கருத்து கூறுவதா? அமைச்சர் சேகர்பாபு மேல்முறையீடு:இந்நிலையில், அமைச்சர்களுக்கு எதிரான இந்த கருத்தை நீக்கக் கோரி, அமைச்சர் சேகர்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (டிச.9) மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'தனி நீதிபதியின் கருத்து தவிர்த்திருக்கக் கூடியது மட்டுமின்றி தேவையற்றது என்றும், சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், தீர்ப்பு வழங்கும் போது நீதிபதிகள் கூறக்கூடிய கருத்துகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், அதனை நீதிபதி ஜெயச்சந்திரன் பின்பற்றவில்லை எனவும், வழக்கில் ஒருவர் வாதியாகவோ? பிரதிவாதியாகவோ? இல்லாத நிலையில் அவரைப் பற்றி கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டுமென உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சனாதன பேச்சு (Sanatanam) தொடர்பாக தொடரப்பட்ட கோ-வாரண்டோ வழக்கு மற்றொரு நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் 'சனாதனம்' குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். தனி நீதிபதியின் கருத்தை அரசியல் எதிரிகள் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், தங்கள் விளக்கத்தை கேட்காமல் இந்த கருத்தைக் கூறியது அடிப்படை உரிமையை மீறிய செயல் என்பதால், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும்' என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:"இந்த பெருமழையினை அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ABOUT THE AUTHOR

...view details