தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்த அமைச்சர் பெரியசாமி - விவசாயிகளை கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது நடவடிக்கை

விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருள்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்

minister periyasami
minister periyasami

By

Published : Aug 12, 2022, 10:22 PM IST

விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை தமிழகத்தில் உள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கூட்டுறவுத் துறை விநியோகம் செய்து வருகிறது.

விவசாயிகள் தாங்கள் பெறும் விவசாயக் கடன்களில் உரப்பகுதியாகவோ அல்லது ரொக்கத்திற்கோ உரங்களைப் பெற்று வருகின்றனர். நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் உரங்களுக்கான கச்சாப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் இறக்குமதி பற்றாக்குறை ஆகிய நெருக்கடியான சூழல் நிலவி வந்த போதிலும், தமிழ்நாட்டில் இரசாயன உரங்கள் விவசாயப் பெருமக்களுக்கு வழங்குவதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நாளது தேதியில் 15,463 மெ.டன்கள் யூரியா உரமும், 13,134 மெ.டன்கள் டிஏபி உரமும், 12,535 மெ.டன்கள் பொட்டாஷ் உரமும் மற்றும் 32,669 மெ.டன்கள் காம்ப்ளக்ஸ் உரங்களும் ஆக மொத்தம் 73,801 மெ.டன்கள் இரசாயன உரங்கள் இருப்பாக உள்ளது. இதில் யூரியா உள்ளிட்ட அனைத்து உரவகைகளும் தேவைக்கேற்ப வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளது தேதியில் 311 மெ.டன்கள் யூரியா உரமும், 327 மெ.டன்கள் டிஏபி உரமும், 225 மெ.டன்கள் பொட்டாஷ் உரமும் மற்றும் 335 மெ.டன்கள் காம்ப்ளக்ஸ் உரங்களும் ஆக மொத்தம் 1,198 மெ.டன்கள் இரசாயன உரங்கள் இருப்பாக உள்ளது. இதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளது தேதியில் 548 மெ.டன்கள் யூரியா உரமும், 292 மெ.டன்கள் டிஏபி உரமும், 455 மெ.டன்கள் பொட்டாஷ் உரமும் மற்றும் 146 மெ.டன்கள் காம்ப்ளக்ஸ் உரங்களும் ஆக மொத்தம் 1,441 மெ.டன்கள் இரசாயன உரங்கள் இருப்பாக உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட குறுவை சாகுபடி திட்டத்தில் நாளது தேதி வரை 7,635 மெ.டன்கள் யூரியா உரமும், 8,487 மெ.டன்கள் டிஏபி உரமும் மற்றும் 4,240 மெ.டன்கள் பொட்டாஷ் உரங்களும் ஆக மொத்தம் 20,362 மெ.டன்கள் இரசாயன உரங்கள் விவசாய பெருமக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை மட்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தாங்கள் பெறும் கடன் பகுதிக்கோ அல்லது ரொக்கத்திற்கோ பெற்றுக் கொள்ளலாம். இது தவிர நானோ யூரியா உள்ளிட்ட எந்த வகை உரங்களோ அல்லது விவசாய இடுபொருட்களோ வாங்குவது கட்டாயமல்ல. இது தொடர்பாக உரிய அறிவுரைகள் மண்டல இணைப்பதிவாளர்கள் மூலமாக அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் இது தொடர்பான புகார்களை மாவட்டத்திலுள்ள கூட்டுறவுத்துறையின் இணைப்பதிவாளர் அவர்களுக்கு தெரிவிக்கலாம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details