தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் வளர்மதி மீதான வழக்குகள் மறு ஆய்வு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கு மறு ஆய்வு

Minister Periyasamy and Valarmathi case review: அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்துள்ளார்.

மைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி
மைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 1:24 PM IST

சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி:கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, கடந்த 2012 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், 2023 மார்ச் மாதம், இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி:இதேபோல 2001 - 2006 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த இரு வழக்குகளையும் விசாரித்தார். வழக்கை இன்று (செப்டம்பர் 08) விசாரணைக்கு எடுத்தது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது.

ஜனநாயகம் தோல்வி:விசாரணையே இல்லாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டது. இது ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளதை காட்டுகிறது. எப்படி லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே மாதிரி எல்லா வழக்குகளிலும் ஆதாரம் இல்லை என கூறமுடியும். லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக மாறிவிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போது, வழக்கை திரும்ப பெறுவதாக சபாநாயகர் எப்படி தெரிவிக்க முடியும்.

விசாரணையை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும்: வழக்குகளில் ஒருதலைபட்சமாக தீர்ப்புகள் வழங்கப்படும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் என்ற தனிநபர் யாரையும் கேள்வி கேட்கவில்லை. கட்டமைப்பு சரியில்லாத போது, ஒரு நீதிபதியாக கேள்வி கேட்க வேண்டிய கடமை தனக்கு உள்ளது.

சட்டத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது. விசாரணையை சட்டரீதியாக அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். அதிகாரத்தை பயன்படுத்தி வெளியேற முடியாது. இன்னும் எவ்வளவு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும் என எனக்கு தெரியவில்லை. கடவுள் தான் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும்” என கருத்து தெரிவித்து அனைத்து தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டார்.

ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான வழக்குகளை, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதேபோல பல வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமைச்சர் பெரியசாமி மீதும், முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திராவிட ஒழிப்பு மாநாடு - "ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டி வற்புறுத்தல் கூடாது"- உயர்நீதிமன்றம் அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details