சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுடன் அமைச்சர் க.பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தண்டையார்பேட்டை மண்டலத்தில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இந்த மண்டலத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் குணமடைந்தோரை தவிர, கரோனா பாதிப்புள்ளவர்கள் 42ஆயிரத்து 955 பேர் மட்டுமே உள்ளனர். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் நம்பிக்கை விதையை தூவுவதை விடுத்து நச்சு விதையை தூவி வருகிறார். கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துவிட்டதாக பீதியை கிளப்புகிறார். இந்த கரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற அளவுக்கு தனது சக்தியை மீறி செலவு செய்து வருகிறது.
மக்களுக்கு அரசின் நிதி உதவி போதுமானதாக இல்லை என்று குறை சொல்லும் ஸ்டாலின், தனது கட்சியின் நிதியிலிருக்கும் 300 கோடியிலிருந்தும், ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் வசூல் செய்த தொகையிலும் அரசிற்கு நிதியுதவி அளிக்கலாம். சாத்தான்குளம் விவகாரத்தில் கனிமொழி அரசியல் செய்வது நியாயமற்றது. குடும்ப சண்டையில் யார் மேலே, யார் கீழே என்ற போட்டியில், உதயநிதியை தாண்டி ஸ்கோர் செய்யவே கனிமொழி இவ்வாறு பேசி வருகிறார்" எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க:’முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது’