தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஆவடி தொகுதிக்குட்பட்ட பட்டாபிராம் ஜீவ ஒளி திருச்சபையில் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், 'ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். புதிய சட்டங்களுடன் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், முன்னதாக அளிக்கப்பட்டுள்ள மூன்று விதமான தளர்வுகள் மேலும் மறுவரையறை செய்யப்பட வாய்ப்புள்ளது. எனினும், தமிழ்நாடு முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமென விரும்புகின்றேன்.
கரோனா ஊரடங்கு காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு, பிரதமர் அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள சிறு, குறு தொழிலாளர்களுக்கு இழப்பீடாக மாநில அரசு கேட்டிருந்த ஒரு லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு இந்த 20 லட்சம் கோடி ரூபாயிலிருந்து அறிவிக்கலாம் என மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.