சென்னை:லயோலா கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். மேலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார். இதனைத் தொடர்ந்து வகுப்பறைகளை மா. சுப்பிரமணியன் ஆய்வுசெய்து, மாணவர்களிடம் கல்லூரிக்கு வருவது குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
சிறப்பு முகாம்கள்
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 313 தடுப்பூசிகளும், தனியார் மருத்துவமனையில் 21 லட்சத்து 28 ஆயிரத்து 72 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் தற்போது ஒரு நாளைக்கு 5.75 லட்சத்திற்கு மேல் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டுவருகிறன.
பள்ளி மற்றும், கல்லூரிகள் திறக்கப்படுவதை ஒட்டி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள், கல்லூரியில் உள்ள அனைத்து ஊழியர்களும் தடுப்பு ஊசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் 122 கல்லூரிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் சிறப்பு முகாமில் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளலாம். அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
லயோலா கல்லூரியில் மா. சுப்பிரமணியன் ஆய்வு உரிய ஆய்வு
இன்றைய தினம் கல்லூரி வகுப்புகளில் ஆய்வு மேற்கொண்டதில் வகுப்பறைகள் சுத்தமாக உள்ளது. இருக்கைகளுக்கு இருக்கை இடைவெளிவிட்டு தகுந்த இடைவெளியுடன் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 1,450 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 10 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 587 பொறியியல் கல்லூரியில் 4.25 தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் இருக்கின்றனர். மேலும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 694 மாணவர்கள் இருக்கின்றனர்.
கல்லூரி நிர்வாகங்கள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அறிவித்த விதிமுறைகளின்படி கல்லூரியை நடத்த வேண்டும். வீரியம் மிகுந்த கரோனா தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை டெல்டா, டெல்டா பிளஸ் மட்டுமே உள்ளது.
தடுப்பூசி
அதிமுக ஆட்சி செய்த மூன்று மாதங்களில் நாள் ஒன்றுக்கு 61 ஆயிரத்து 441 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது, மொத்தமாக மூன்று மாதங்களில் 63 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 116 நாள்களில் 2.60 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நாளொன்றுக்கு 5.75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நிர்வாகத் திறமை, வசதியால் நாளொன்றுக்கு ஏழு முதல் எட்டு லட்சம் வரை தடுப்பூசிகள் செலுத்த முடியும். பழங்குடிகள் அனைவரும் 100 விழுக்காடு தடுப்பு ஊசிகள் செலுத்திக்கொண்ட நிலையில், உயிர் மீது ஆசை உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியல்