சென்னை:தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான ஒவ்வொரு துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, நகராட்சி, பேரூராட்சிகள் மறுவரையறை செய்யும் போது அருகில் இருக்கும் ஊராட்சிகளையும் சேர்த்து இணைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாக கூறினார்.
மேலும், நகராட்சிகளுடன் இணைப்பதற்கு ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில் அரசு என்ன மாதிரியான முடிவு எடுக்க உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "நகராட்சிகளுடன் இணைக்கும் போது நூறு நாள் வேலைத்திட்டம் பறிபோய்விடும் என கருதி ஊராட்சி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி பகுதிகளை போல பேரூராட்சிகளிலும் நூறு நாள் வேலைத்திட்டம் செயல்படுத்துவதற்காக நடப்பாண்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சி மக்களும் பயன்பெறுவார்கள்" என விளக்கமளித்தார்.
மேலும், ஊராட்சி பகுதிகளை நகராட்சிகளுடன் இணைக்கும் போது அரசு நிர்வாக வசதியை மக்கள் எளிதாக பெற முடியும் என்பதோடு, முன்னேற்றத்திற்கான வழி என்பதால் அவ்வாறு செய்கிறோம் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
அதேபோல், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளை சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குப்பைகளையும் கழிவுகளையும் ஏரிகளில் கொட்டுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதாகவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஏரிகளைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்குமா? ஏரிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்படுவார்களா? கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "சென்னை மக்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஏரிகள் அனைத்தும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், ஏரிகளில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறினார். மேலும், கழிவுநீர் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பெருத்தப்பட்டு உள்ளதோடு, லாரிகள் எங்கு செல்கிறது என்று கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்" தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு செக்.. அரசின் அதிரடி உத்தரவு என்ன?