சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சனிக்கிழமை (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமிப்புத்துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால் வளத்துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது.
இதில் பால் வளத்துறை துறைகளின் மீதான சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் சா.மு.நாசர் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 13 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனை 2021-22 ஆம் ஆண்டில் 15 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆவின் பொருள்களை துபாய், அபுதாபி, ஓமன், கலிபோர்னியா போன்ற நாடுகளில் விநியோகம் செய்ய முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் வாரிசு உள்பட 47 பால்வளத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 200 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்" என்றார்.
பால் வளம் மானிய கோரிக்கையில் 16 புதிய அறிவிப்புகள்:
* தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பால் தொகுப்பு குளிர்விப்பான்களை 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும்.
* பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சேவைகளில் ஒன்றான அவர்கள் இலங்கைக்கு நேரடியாக சென்று கால்நடைகளுக்கு இலவச மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் ஒருவரை 6 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் தேவைக்காக 2 குளிர் காப்பு மற்றும் மூன்று குளிர்சாதன வசதி வேன்கள் 80 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.
* பாலின் தரத்தை மேம்படுத்த பால் கேன்களை குளிர்விக்கும் 40 இயந்திரங்கள் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு வழங்கப்படும்.
* கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் 453 பால் பகுப்பாய்வு கருவிகள் ரூபாய் 2 கோடியே 26 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.
* 60 தானியங்கி பால் கறக்கும் கருவிகள் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு 36 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
* பால் உற்பத்தியாளர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு மாதம்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்.
* புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவி இடங்கள் அரசு ஆணை பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.