சென்னை: தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஏராளமான மக்கள் விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கான முன்னுரிமை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கான நலத் திட்ட உதவிகள் மற்றும் மானியம் உள்ளிட்ட அடிப்படையில் பலன் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து இருந்துகொண்டு தான் இருக்கிறது.
அது மட்டும் இன்றி தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் உணவுப் பொருட்கள் முதல் நிலத்தில் விளைவித்து எடுக்கும் அனைத்து தொழில் சார்ந்த பொருட்களும் அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் மற்றும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் நலன் பெறும் வகையிலும் திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தமிழக அரசிடம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயத்திற்கான நீர்ப் பாசன வசதியைக் கருத்தில் கொண்டு 15 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் விவசாயிகளுக்குப் பம்பு செட்டுகளை வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "விவசாயிகளின் நலனுக்காக, மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக, புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வாங்குவதற்கான மானியத்தை தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை வழங்கி வருகிறது.
யாருக்கு மானியம்?: 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், தங்களது திறன்குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக கிணறு அமைத்து சொந்தமாக மின் இணைப்பு பெற்று புதிய மோட்டர் அமைக்க விரும்பினாலும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இத்திட்டத்தில் 5 ஆயிரம் சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு இலக்காக 1000 பம்பு செட்டுகள் வழங்குவதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.