சென்னை:கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில், ‘தமிழ்நாட்டில் தற்கொலையால் ஏற்படும் சமூக - பொருளாதார இழப்பு’ குறித்து ஐஐடி பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் மற்றும் நிஜினா நாசர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் தற்கொலைகளைத் தடுக்க 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்காலிகமான அடிப்படையில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை மத்திய அரசு மூலம் நிரந்தரமாக தடை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தற்கொலை முயற்சிக்கு சானிப்பவுடர் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு பயன்படும் பொருட்களை வெளிப்படைத் தன்மையுடன் மருந்தகம் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் விவசாயிகள் மட்டும் 559 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் இடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருகிறது.
மாணவர்களிடம் அதிகரிக்கும் தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ‘மனம்’ என்ற மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மனம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், வரும் கல்வியாண்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்களாக 4 காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது.