சென்னை:உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சிறுநீரக செயலிழப்பு அளவீடு குறித்த கள ஆராய்ச்சி முடிவு அறிக்கையினை அமைச்சர் வெளியிட்டார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் சிறுநீரகச் செயலிழப்பு நோய்த்தாக்க கள ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் தழுவிய அளவிலான இத்தகைய ஆராய்ச்சி, இந்தியாவிலேயே முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
இதே போன்ற மற்றுமொரு கள ஆராய்ச்சியில் சமீபத்திய அனுபவத்தில், முறை சாராப்பணியாளர்களான விவசாயப் பணியாளர்கள், சிறுநீரகப் பாதிப்பிற்கு அதிக அளவில் உள்ளாவது தெரிய வந்துள்ளது. எனவே, தமிழ்நாடு முழுவதுமான அளவில் விவசாயப் பணியாளர்கள் மத்தியில் சிறுநீரக நோய்த்தாக்கம் எந்த அளவில் உள்ளது என்பதைக் கண்டறிய ஓர் ஆராய்ச்சி தொடங்கப்பட உள்ளது.
இந்த ஆராய்ச்சியானது சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரக இயல் மற்றும் சமூக மருத்துவ இயல் துறையினரால் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு உலக சிறுநீரக நாள் கருத்தாக்கம் - அனைவருக்கும் சிறுநீரக நலம், எதிர்பாராத சிக்கலான தருணங்களிலும் சிறுநீரக நோயாளிகளைக் காப்போம், எளிதில் பாதிப்படையக்கூடிய சிறுநீரக நோயாளிகளுக்கு உறுதுணையாவோம் என்பதாகும்.
நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு நோய் (Chronic Kidney Disease) உலகளாவிய அளவில், ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. உலகமெங்கும் 85 கோடிக்கும் அதிகமான நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகமெங்கும் பாதிக்கப்பட்டவர்களில், மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் இந்தியா மற்றும் சீனாவில் மட்டுமே உள்ளனர். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு நோய் சவாலை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு பல செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்தான் சிறுநீரகச் செயலிழப்பிற்கான முக்கிய காரணங்கள் ஆகும். இந்த நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தொடர்ச்சியாக இடைவெளி விடாமல் மருந்துகளை உட்கொள்வது அவசியம். சிறுநீரகச் செயலிழப்பு முற்றிய நோயாளிகளுக்கு, டயாலிசிஸ் மற்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகின்றன.