சென்னையில் மண்டல வாரியாக கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவினை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
வடசென்னையில் பாதிப்பு அதிகம் உள்ளதால், தண்டையார்பேட்டை பகுதிக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை முதலமைச்சர் நியமித்தார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 10) புதுவண்ணாரப்பேட்டை சந்தை பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை செய்தார்.
அந்தப் பகுதியில் துப்புரவுப் பணிகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அதன்பின், அலுவலர்களுடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.