தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜெயக்குமார் ஒரு கோமாளி' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

'அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஒரு அரசியல்வாதியாக பேசினால் அவருக்குப் பதில் சொல்லலாம்; அவர் ஒரு ஜோக்கர், கோமாளி. அவருக்கெல்லாம் பதிலளிக்க விருப்பமில்லை' என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 14, 2022, 7:24 PM IST

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், பல் மருத்துவப் பிரிவு, ரூ.10 கோடி செலவில் பேறுகால பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவு, கட்டுமானப்பணி ஆகியவற்றை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் பேறுகால பச்சிளங் குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு கட்டட கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மருத்துவமனைக்கு ஆயிரத்து 500 நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

நீண்ட நாள் கோரிக்கையான பல் மருத்துவ சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 92 பல் மருத்துவர், 80 மருத்துவ உதவியாளர் என 172 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட சுகாதார நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக 29 பல் மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலியாகவுள்ள மருத்துவர்கள் உள்பட இதர இடங்களை நிரப்ப மருத்துவ சர்வீஸ் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு ரூ.42 கோடி செலவில் பல்நோக்கு சிறப்பு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இருக்கும்.

தமிழ்நாட்டில் டெங்கு தினசரி பாதிப்பு 300-க்கும் மேற்பட்டதாக இருந்தது. தற்போது குறையத் தொடங்கியது. பருவ நிலை மாற்றங்களில் டெங்கு அதிகரிக்கும். ஆனால், தீவிர நடவடிக்கை காரணமாக டெங்கு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் 5 பேர் இறந்துள்ளனர். கடந்த காலங்களை விட இது மிக மிக குறைவு. டெங்கினால் இறப்பே இல்லாத நிலையை எட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

24 மருத்துவமனைகள் தரம் உயர்த்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 4308 காலிப் பணியிடங்கள் மருத்துவ சர்வீஸ் குழு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. தாற்காலிக பணியிடங்களை மாவட்ட சுகாதாரக் குழு மூலம் நியமிக்கப்படுகின்றனர். கிண்டியில் ரூ. 230 கோடி செலவில் பன்நோக்கு மருத்துவமனையின் 60 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே நிறைவு பெற்று முதலமைச்சர் திறந்து வைப்பார்.

கிண்டியில் மூத்தோருக்கான பிரத்யேக மருத்துவமனையில் சீரமைப்புப் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த மருத்துவமனை திறந்து வைக்கப்படவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தான் மூத்தோருக்கான முதல் பிரத்யேக மருத்துவமனை அமையயுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் இளைஞர்களில் நலன் காக்கும் அணியாக திமுக இளைஞரணியை வழிநடத்தி வரும் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி பணியைப் போலவே துறை ரீதியாகவும் மிக சிறப்பாக செயல்படுவார். அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஒரு அரசியல்வாதியாக பேசினால் பதில் சொல்லலாம். ஜோக்கர், கோமாளி. அவருக்கெல்லாம் பதிலளிக்க விருப்பமில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். கட்டுமானப் பணிக்கான டெண்டர் எதுவும் நடக்கவில்லை. மருத்துவ கவுன்சில் தேர்தலை ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்ஸை சந்திப்பேன் - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details