சென்னை குரங்கு அம்மை பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், குரங்கு அம்மை பரவிய நாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 03) குவைத், சார்ஜ், டாக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குரங்கு அம்மை பரவிய நாடுகளில் இருந்து வருபவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், “பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 30 நாடுகளில் குரங்கு அம்மை நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 550 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 15 நாள்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை. மே 20ஆம் தேதி முதல் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 630 விமானங்களில் வந்த ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 332 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.