சென்னை திருவான்மியூரில் உள்ள இம்காப்ஸ் சித்த மருத்துவ மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் 75ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்சாலை கட்டடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'இம்காப்ஸ் மருத்துவமனையில் பவள விழாவை முன்னிட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. இதுமட்டுமில்லாமல், இவர்கள் பல்வேறு கோரிக்கை வைத்தார்கள். அதை அனைத்தையும் செய்து தருவதாக உத்தரவிட்டுள்ளேன்.
குறிப்பாக, இம்காப்ஸ் மருந்துகளை அரசு கொள்முதல் செய்வது, கூட்டுறவுத்துறையில் கண்காட்சி விற்பனை செய்வதற்கான நடவடிக்கை, உயிர் காக்கும் மருந்து உருவாக்குவதற்காக மான்கொம்பு கிடைக்க வழிவகை செய்வது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்துள்ளேன்.
செவிலியருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்:சென்னை - டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியருக்கு அரசின் சார்பில் உரிய மாற்றுப் பணி விரைவில் வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் உரிய முன் அனுமதியைப் பெற்று போராடி இருந்தால், காவல் துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.
அதுமட்டுமின்றி, அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களைப் பொறுத்தமட்டில், ஏற்கெனவே அவர்கள் தற்காலிக அடிப்படையில் தான் கடந்த ஆட்சியில் பணியமர்த்தப்பட்டனர். சம்பந்தப்பட்ட இந்த மருத்துவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் அரசின் சார்பில் பணி வாய்ப்புகளில் வருங்காலங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
முகக்கவசம் அணிவது கட்டாயம்:பொது இடங்களில் தடுப்பூசி கட்டாயம் என்ற கட்டுப்பாடு மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் மற்ற பிற வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை எனத் தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் அடுத்த ஒரு அலை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்னும் இரண்டு மாதங்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதால், எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இனிவரும் காலங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது.
சித்தா பல்கலைக்கழகம், சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியில் 19.2 ஏக்கரில் அமைக்கப்படும். இதற்கான நிதி வருகின்ற நிதியாண்டில் ஒதுக்கப்படவுள்ளது. சித்தா பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்தகரையில் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க:இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி