சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமிற்கான வாகனங்களை மா. சுப்பிரமணியன் சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பச்சை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், "ஆயிரத்து 560 இந்திய மருத்துவ மையம் மூலம் டெங்கு, வெள்ளம் பாதித்த பகுதிகளில் கபசுரம், நில வேம்பு, மருந்து மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன. சென்னையில் தலா ஒரு வாகனத்தில் மூன்று மருத்துவர்கள் மூலம் 150 மருத்துவர்களைப் பயன்படுத்தி, 50 வாகனங்கள் மூலம் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன.
மருத்துவர்கள் மீது நடவடிக்கை
ஒரு வாகனத்தில் தலா 30 லிட்டர் கபசுரம், நிலவேம்பு குடிநீருடன் தாளிசாதி, ஆடாதொடை உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை சார்பில் மே 7 முதல் கரோனா சிகிச்சை மையம் அமைத்து மருத்துவம் அளிக்கப்படுகிறது. இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இதன்மூலம் குணமடைந்தனர்.
மருத்துவர்களுக்கு தற்போதைய நிலை கடினமான இலக்குதான், வேலை செய்வதில் சிரமம் இருந்தாலும் திருப்தியாக, மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எப்போதுமே வேலையே செய்யாமல் இருக்கும் நான்கைந்து மருத்துவர்கள்தாம், சமூக வலைதளங்களில் கூடுதல் பணிச்சுமை, இலக்குவைத்து வேலை வாங்குவதாக விமர்சிக்கின்றனர். விசாரித்ததில் அவர்கள் வேலையே செய்யாதவர்கள்தான் எனத் தெரியவந்துள்ளது.
இன்னும் ஒரு மாதம் மட்டும் ஆத்மார்த்தமாக வேலை செய்யுமாறு மருத்துவர்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறோம். அதுவரை சக மருத்துவர்கள் செய்யும் வேலையைக் கெடுக்க முனைய வேண்டாம். முறையாக வேலை செய்யாத மருத்துவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது. ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு, ஆணையிடும் அமைச்சர்களாக நாங்கள் இல்லை.