சென்னை:கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பினை பார்வையிட வந்த குஜராத் மாநில மருத்துவக் குழுவினருடனான கலந்துரையாடல் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் திருவள்ளூர் மற்றும் ஆவடி ரயில் நிலையங்களுக்கு “Eat Right Station” என்ற தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குஜராத் மாநில மருத்துவத் துறை அலுவலர்கள் 60 பேர் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பினை பார்வையிட்டனர். அந்த வகையில் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், பூந்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையம், தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, போன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டுள்ளனர். பின்னர், தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவக் கட்டமைப்புகளை பாராட்டினர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக நமது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட, புற்றுநோய் சிகிச்சைக்காக ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். அதேபோல், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்தவமனையில் டபுள் பலூன் எண்டோஸ்கோப்பி (Double Balloon Endoscopy) கருவி, எம்ஆர்ஐ போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகளை பார்வையிட்டார்கள். தமிழ்நாட்டில் மகப்பேறு மருத்துவம், இருதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுவதை பாராட்டியுள்ளனர்.
‘Eat Right Station’ என்ற சான்றுகள் ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோயில்களில் இருக்கும் உணவு தயாரிப்பு கூடங்களுக்கு இந்த சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய முயற்சியாக திருவள்ளூர், ஆவடி ஆகிய இரண்டு ரயில்வே நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் மூலம் திருமண மண்டபங்கள், கூட்டங்களில் சமைக்கப்படும் உபரி உணவுகள் எடுத்துச் செல்லப்பட்டு தேவைப்படுவோர்களுக்கு வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக ஒரு கோடியே 44லட்சத்து 82ஆயிரத்து 353 குடும்பங்கள் உள்ளன. புதியதாக 7லட்சத்து 70ஆயிரம் குடும்பங்கள் அன்மையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் மூலமும், புதிய காப்பீட்டுத் திட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மூலமும் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, 18.11.2023 அன்று, கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் ஒரே நாளில் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை வழங்கும் முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்களுக்கு அரசு சார்பில் மரியாதை: “தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 23ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்தவர்களுடைய உடல்களுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நான் நேரடியாக தேனி மாவட்டத்தில் உறுப்பு தானம் செய்த ஒருவருடைய உடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தோடு இணைந்து அரசின் சார்பில் மரியாதை செலுத்தினோம்.