சென்னை: கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலால், சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாண்டஸ் புயல் பாதிப்பால் சைதாப்பேட்டை நெருப்பு மேடு என்ற குடிசைப்பகுதியில் ஆஸ்பெட்டாஸ் வீட்டில் தாய், தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, புயல் கரையைக் கடந்த நேரத்தில் பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வீட்டின் ஓடுகள் உடைந்ததில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் மாற்றுத்திறனாளியான தந்தை, சைக்கிள் கடையில் வேலை பார்த்து வருபவர். தாய் ஆறு மாத குழந்தையை அணைத்துக் கொண்டே படுத்திருந்ததால், சின்னக்குழந்தைக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை. மற்றொரு மூன்றரை வயது குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.