தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கம்! - tamil news

Minister Ma Subramanian: 264 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 என ஒரு இலக்கத்தில் உள்ளது, எனவே யாரும் பயப்பட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 1:32 PM IST

சென்னை: தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை நேற்று (டிச.14) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 264 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சென்னை மாநகரில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 8 பேரும், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மயிலாடுதுறை, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஒரு வாரமாக சிங்கப்பூர் மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 230ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆயிரத்து 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பொது சுகாதாரத்துறை அதிகாரி தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது அங்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், மிதமான வகையில் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த பாதிப்பு மூன்று முதல் நான்கு நாட்களில் தொண்டை வலி அல்லது சளியுடன் சரியாகி விடுகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மிகச் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். தமிழக அரசின் சார்பில் 78, தனியார் மருத்துவ ஆய்வகங்களில் 253 என 331 இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மையங்கள் உள்ளன.

கேரளாவில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருந்தாலும், தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அதிகரிக்க கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று (டிச.14) 264 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று மாதங்களுக்குப் பிறகு 200க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் பாதிப்பு 8 பேர் என ஒரு இலக்கத்தில் உள்ளது.

இந்த பாதிப்பு என்பது தொடர்ச்சியாக ஏழு மாத காலமாக இருந்து வருவதால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நேற்றைய சோதனையில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருமல், சளி என்ற வகையில்தான் இந்த தொற்று இருந்து கொண்டிருக்கிறது.

கரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என பல வகைகளில் வந்துள்ளது. இது எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிய, இதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பச் சொல்லி உள்ளோம். இதன் முடிவுகள் வந்த பிறகு எந்த வகையை சேர்ந்தது என கூறப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'மக்களுடன் முதல்வர்' திட்டம்: டிச.18ஆம் தேதி கோவையில் துவக்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details