சென்னை: வீடு தேடி தடுப்பூசி' திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் சேலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்தை அளிக்கிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வலியுறுத்தல்
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரை முதலமைச்சர் சந்தித்த போதும், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை 3 முறை சந்தித்த போதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினோம்.
இதுவரை ஒன்றிய அரசு நீட் தேர்வு பிரச்னையில் முழு தீர்வு காணவில்லை. தமிழ்நாட்டில் 1,10,971 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வு எழுதியவுடன் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் 333 மன நல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.