தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய ஒதுக்கீட்டில் நிரம்பாத மருத்துவ இடங்களை தமிழ்நாட்டிற்கு வழங்குக: அமைச்சர் மா.சு வலியுறுத்தல்

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் அனைந்து இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் எம்.பி.பி.எஸ் இடங்களை மாநில ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

By

Published : Jan 6, 2023, 5:09 PM IST

Updated : Jan 6, 2023, 5:15 PM IST

டெல்லி:தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுவை வழங்கினார்.

அதில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி உள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்றுத் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவக் கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோரியும், ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக அரசு செவிலியர் கல்லூரி நிறுவுதல், உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பைத் தொடர வழிவகை செய்தல், மருத்துவப் பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபனை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாட்டிற்கு கரோனா தடுப்பு மருந்து கூடுதலாக வழங்க நடவடிக்கை, பதினைந்தாவது நிதி ஆணையம் 2022 முதல் 23ஆம் நிதி ஆண்டிற்கு ஒப்புதல் அளித்த நிதியை உடனடியாக விடுவிக்கக்கோரியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களை மாநிலத்திற்கு ஒப்படைக்கக் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கக் கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டின் கலந்தாய்வு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 847 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தலா ஒரு இடம் கூடம் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் அதை மாநிலத்திற்கு ஒதுக்கக் கோரி’’ இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சரிடம், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவால் ஆண்மை குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Last Updated : Jan 6, 2023, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details