சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எச்ஐவி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏஆர்டி (Anti Retroviral Treatment) கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்தும், 5 இரத்த சுத்திகரிப்பு அலகுகளுடன் புதிய இரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டத்தையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இலவச ஏஆர்டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் சுமார் 300 எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் பயனடைவார்கள்.
இதன் மூலம் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ஏஆர்டி கூட்டு மருத்துவ சிகிச்சை, அவ்வப்போது ஏற்படும் உபாதைகளுக்கான சிகிச்சை, எச்ஐவி தொற்று கிருமி அளவு பரிசோதனை, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதல் முறையாக 1986 ஆம் ஆண்டு எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டது. 1994 ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தீவிர முயற்சியால் எச்ஐவி தொற்றால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரத்து 786 குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு மற்றும் கல்விக்காக ரூ.25 கோடி அரசு வைப்பு நிதி மூலம் வரும் வட்டித் தொகையில் செலவிடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 30 லட்சம் பொதுமக்களுக்கும், 12 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கும் இலவச எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 324 லட்சம் எச்ஐவி நோயாளிகளுக்கு இலவச ஏஆர்டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் எச்ஐவி பாதிப்பு 0.22 சதவீதமாக உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் எச்ஐவி பாதிப்பு 0.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 976 தொற்று கண்டறியும் நம்பிக்கை, 68 ஏஆர்டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக, ஆண்டு தோறும் ரூ.2.41 கோடி செலவில் 34 இளைப்பாறுதல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே எச்ஐவி நோய் குறைந்த மாநிலமாக இன்று தமிழ்நாடு திகழ்கிறது.
2023 - 24 மானியக் கோரிக்கை அறிவிப்பின்டி, சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை ரூ.2 கோடி செலவில் அனைத்து நகர்புற, ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் என்ற திட்டம், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அனைத்து ஊரக பகுதிகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.