சென்னைராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதி நவீன நரம்பியல் சிகிச்சைப் பிரிவிற்கான புதிய கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மேலும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், எலும்பு புற்றுநோய்ப் பதிப்பிலிருந்து குணமடைந்த 14 வயது சிறுமி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வாழ்த்து பெற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அரசு மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே மருத்துவர்கள் அறிவுரையின்றி வீடுகளிலேயே மருந்து எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனைகளுக்குச் சென்று அறிவியல் பூர்வ சிகிச்சைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அதி நவீன நரம்பியல் துறை கட்டடம் ரூ.60 லட்சம் செலவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கு 6 தீவிர படுக்கைகளும் , 42 சாதாரண படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பக்கவாதம் வந்தவுடன், பாதிக்கப்பட்டவர்கள் நான்கரை மணி நேரத்திற்குள் மாவட்ட அரசு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை அணுகினால் 1 லட்சம் மதிப்புள்ள ஊசியை இலவசமாகச் செலுத்திக்கொள்வதன் மூலம் உடனடியாக குணமாக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்கவாதத்திற்குச் சிகிச்சை பெற வந்தாலும் 100 முதல் 150 நபர்களே, பாதிப்பு ஏற்பட்ட நான்கரை மணி நேரத்தினுள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் Internship எனும் உள்ளுறைப் பயிற்சி மேற்கொள்ள 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. வருவாய் குறைவாக இருப்போர் தான் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கின்றனர். ஆனால், பயிற்சிக்கு இந்தளவு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகக் கூறினர். எனவே, தற்போது அந்தக் கட்டணம் 29ஆயிரத்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.