தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - டெல்லி எய்ம்ஸ்

Minister Ma.Subramanian: எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை எனவும், இந்தியாவின் முதியோருக்கான முதல் மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 6:28 PM IST

Updated : Oct 17, 2023, 8:56 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை:இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், 2023 - 2024ஆம் ஆண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.17) வெளியிட்டார்.

இதனை அத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டை பொறுத்தவரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு பல்வேறு சிறப்பான வசதிகள் செய்யப்படுகின்றன.

சித்தா எய்ம்ஸ்:அதேபோல், மதுரையில் பெரிய அளவிலான ஹோமியோபதி கல்லூரி கட்டும் பணியும் தொடங்கப்பட இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை போன்று சித்தா மருத்துவத்தில் சித்தா எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றிய அரசுக்கு வைக்கப்படுகிறது. அது கிடைக்கும்பட்சத்தில், அம்மருத்துவமனை திருச்சியில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஆளுநரின் ஒப்புதலுடன் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்:ஏற்கெனவே, தமிழ்நாட்டில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாகுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதற்காக 25 ஏக்கர் பரப்பளவில் மாதவரம் பால் பண்ணையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அரசு பொறுப்பேற்ற முதலாம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக நிர்வாக வசதிக்கான அலுவலகத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த அலுவலகம் அறிஞர் அண்ணா அரசு இந்தியமுறை மருத்துவமனை வளாகத்தில் தயார் நிலையில் இருக்கிறது. எனவே, ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு இந்த சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடக்கவிழா நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருக்கின்ற சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு சித்த மருத்துவக்கல்லூரிகள் 2 இடங்களிலும், சுயநிதி கல்லூரிகள் 11 இடங்களிலும் என ஆக மொத்தம் 13 சித்தா மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றது.

மேலும், ஆயுர்வேதா பிரிவில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி, 6 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 7 ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றது. யுனானி பிரிவினைப் பொறுத்தவரை ஒரு அரசு மருத்துவக்கல்லூரி செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. ஓமியோபதி பிரிவைப் பொறுத்தவரை ஒரு அரசு மருத்துவக்கல்லூரி, 11 சுயநிதி கல்லூரிகள் என ஆக மொத்தம் 12 மருத்துவக்கல்லூரிகள் செயல்பாட்டில் இருக்கின்றது.

90% மாணவர்களுக்கு மருத்துவப் படிக்க வாய்ப்பு:தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 33 ஆகும். இந்த 33 கல்லூரிகளுக்கும் இந்த 4 பிரிவுகளுக்கான மருத்துவ சேர்க்கைக்கு அதற்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக பெறப்பட்டிருக்கும் மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,695 ஆகும்.

இதில் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கையினை பொறுத்தவரை 2,530 ஆக உள்ளது. தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் இருக்கின்றதோ? அதே அளவிற்கு ஏறத்தாழ பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் இருக்கின்றது. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் ஏறத்தாழ 90% மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைப்பதற்குரிய நல்வாய்ப்பும் இருக்கின்றது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் தகுதியான மாணவர்கள்: தரவரிசைப்பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 602 ஆகும். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டிற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 596, தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 556, ஆக இதிலும் கூட விண்ணப்பித்த 90% மாணவர்களுக்கு இதில் வாய்ப்பு கிடைக்க பிரகாசமான நிலையுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,040 இதில் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 968, அகில இந்திய இடஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 942, தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 913 ஆகும்.

2,064 மருத்துவப் படிப்புக்கான இடங்கள்:அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள மொத்த இருக்கைகளின் விவரத்தைப் பொறுத்தவரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பொதுப் பிரிவிற்கு 254 ஆகவும், 7.5% இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் 21 ஆகவும் உள்ளது.

சுயநிதி மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் அரசிற்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் 862 ஆகவும், 7.5% இடஒதுக்கீட்டிற்கு இடங்கள் 71 ஆகவும் உள்ளது. சுயநிதி இந்திய மருத்துவமனை மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதமாகவும், தமிழ்நாடு அரசால் நிரப்பப்படுபவை 260 இடங்களாகவும், சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 545 ஆகவும், அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஒன்றிய அரசால் நிரப்பப்படுபவை 49 என ஆக மொத்தம் 2,064 இடங்கள் உள்ளன.

ஆயுஷ் படிப்பிற்கான கலந்தாய்வு:அக்டோபர் 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, அரசுப்பள்ளிகளில் பயில்கின்ற 7.5% இடஒதுக்கீடு ஆகிய இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. மேலும் அக்.27 முதல் 29-ஆம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசிற்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

அக்டோபர் 31-ஆம் தேதி அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. நவ.1 மற்றும் 2-ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. நவ.20-ஆம் தேதி மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும். ஆயுஷ் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீடு முடிந்த பின்னரே மாநில கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளதால், ஆயுஷ் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த தாமதம் ஏற்படும் நிலையில், தமிழ்நாடு சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது.

ஒன்றிய அரசு தான் பதிலளிக்க வேண்டும்:எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களை தமிழ்நாடு அரசு நிரப்புவதற்கு அனுமதி அளிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வுச் செய்துவிட்டு, சேராத மாணவர்களிடம் தமிழ்நாடு அரசு எந்தவிதமான அபாரத் தொகையும் வசூலிக்க முடியாது. ஒன்றிய அரசு தான் சேராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்.

சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர்: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே ஒரு சில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு முதலமைச்சரிடம் இருக்கிறது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேந்தராக முதலமைச்சரும், இணை வேந்தராக அந்த துறையின் அமைச்சரும், துணை வேந்தராக முதலமைச்சரால் நியமிக்கப்படும் நபர் இருப்பார் என்று சட்டதிட்டங்கள் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஒன்றிய ஆயுஷ் அமைச்சரிடம் இதுதொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆளுநருக்கு வேந்தர் பொறுப்பினை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் எத்தனைப் பேருக்கு டெங்கு காய்ச்சல்:தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இல்லை. வராத நிலையில் அதைப்பற்றி கூறி மக்களை பதட்டமாக்க வேண்டாம். இந்த காலகட்டத்தில் டெங்குதான் அதிகம் பரவும், அதுவும் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 5,242. நேற்று மட்டும் 33 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. மொத்தம் 472 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை, டெங்குவால் 4 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மருத்துவத்துறை மற்றும் காவல்துறை இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் விற்பனை செய்துள்ளதாக அறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் இந்தியாவின் முதியோருக்கான முதல் மருத்துவமனை: கிண்டி, கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை தொடங்கிவைக்க தமிழ்நாடு முதலமைச்சரிடம், ஒன்றிய அமைச்சரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலேயே முதல் முதியோருக்கான மருத்துவமனை இங்கு திறந்து வைக்கப்படும்.

டெல்லி எய்ம்ஸ் மற்றும் சென்னை கிண்டியில் முதியோருக்கான மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் டெல்லி எய்ம்ஸில் இன்னும் பணிகள் முடிவடையவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, சென்னை கிண்டியில் முதியோர் மருத்துவமனை அமைக்கும் பணிகளை முடித்து திறப்பு விழாவிற்காக தயார்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் லியோ படத்தை கொடுக்காதது தான் தொல்லைக்கு காரணம்" - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

Last Updated : Oct 17, 2023, 8:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details