சென்னை:தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ படிப்பு இடங்களை நிரப்புவது தொடர்பாக முதலமைச்சரின் ஒப்புதலோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மந்தைவெளி பகுதியில் 'மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு' நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இன்று (அக்.22) தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation) சார்பில் கடந்த 37 ஆண்டுகளாக 'அக்டோபர் மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு' மாதமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு (Breast Cancer Awareness) மிக அவசியமான ஒன்றாக உள்ளது. 1 லட்சம் மகளிருக்கு 25.8 பேர் மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுகிறது. 1 லட்சம் பேரில் 12.7 பேர் இதனால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மார்பக புற்றுநோய் கண்டறியும் 2D மேமோகிராம் கருவி தமிழகத்தில் 43 இடங்களில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல நவீன 3டி மேமோகிராம் கருவிகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கிறது.
முற்றிலும் இலவச பரிசோதனை:இதற்காக, ரூ.2500 தொகையில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழுவதும் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், ஆண்களுக்கான புகையிலை மூலம் வாய்ப்புற்றுநோய் என எதுவாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உயிர்காக்க முடியும்.
அகில இந்திய ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு:எம்பிபிஎஸ் படிப்பில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாகவும், 85 சதவீதம் மாநில ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளது. இதில் கடந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 6 இடங்கள் காலியாக இருந்தன. இந்தாண்டு 83 இடங்கள் காலியாக உள்ளது. இதனால், கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது.