கள்ளச்சாராய விற்பனை என்பது எல்லா ஆட்சிக்காலத்திலும் தான் இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓபன் டாக் சென்னை:கள்ளச்சாராய விற்பனை என்பது எல்லா ஆட்சிக்காலத்திலும் தான் இருக்கிறது எனவும் முதலமைச்சர், தனது நடவடிக்கையால் இரும்புக் கரம் கொண்டு முதலமைச்சர் அதனை ஒழிப்பார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குனர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மருத்துவத் துறை உயர் அலுவலர்கள், மருத்துவர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு உறுதிமொழியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக செயல்பட்ட பணியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, “தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி ஆகிய துறைகளுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் டெங்கு ஒழிப்புக்காக டெங்குவை பரப்பும் கொசுக்களை அழிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் முந்தைய காலங்களில் ஏற்பட்டப் பாதிப்புகளை விட கடந்த ஆண்டு டெங்கு, மலேரியா ஆகிய பாதிப்புகள் குறைந்துள்ளன.
டெங்கு பாதிப்பை உறுதிசெய்ய கடந்த ஆண்டு 1,07,350 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 2,426 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் ஒன்று, இரண்டு என்கிற அளவில் மட்டுமே பதிப்புகள் உறுதிசெய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொசு ஒழிப்புப் பணியில் 22,00 பணியாளர்கள் உள்ளனர். புகைமருந்து அடிக்கும் மிசின்கள் 1,158, சிறிய மிசின்கள் 7,213, மிகச்சிறிய புகை அடிப்பான்கள் 7,634 என்கிற அளவில் பயன்பாட்டில் உள்ளன. மேலும் மருந்துகளும் தேவையான அளவில் உள்ளன. கடந்த ஆண்டைப் போல வரும் ஆண்டிலும் டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிரமான பணியில் ஈடுபட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் டெங்குவை உண்டாக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் வளரும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கொசு மருந்துகளான டெக்னிக்கல் மாலத்தியன், பைரித்திரம் மருந்துகள் கையில் உள்ளன. மேலும் இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் அவை எவ்வளவு நேரத்தில் இறக்கின்றன என்பது குறித்தும் ஆய்வு மூலம் செய்து காட்டப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்புளுன்சா காய்ச்சலை தடுக்க 80 ஆயிரத்து 950 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 30 லட்சத்து 94 ஆயிரத்து 94 பயனாளிகள் பயன் பெற்றனர். இந்த முகமின் மூலம் 14,312 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு குணமடைந்து நலமுடன் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்து, கிட்டத்தட்ட கரோனா பாதிப்பு இல்லை என்கிற நிலையே உருவாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனம் கரோனா தொற்றை பேரிடர் என்பதில் இருந்து நீக்கி அறிவுள்ளது.
தினசரி பாதிப்பை எடுத்துக் கொண்டால் நேற்றைக்கு 16 பேருக்கு தான் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அதுவும் இன்றைக்கு ஒற்றை இலக்கத்தில் தான் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 66 பேர் தற்போது விழுப்புரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்துள்ள நிலையில், இன்று நான் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன். அங்கு தான் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். கள்ள சாராயம் குடித்து மருத்துவமனையில் இருப்போருக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய சிறப்பு அலுவலரை நியமிக்க உள்ளோம்.
கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தவும், தடைசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள்ளச்சாராயம் எல்லா ஆட்சிக் காலத்திலும் இருந்து வருகிறது. தற்பொழுது முதலமைச்சர் எடுக்கும் கடும் நடவடிக்கையால் கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும். நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியல் தேசிய தேர்வு முகமையிலிருந்து பெறப்பட்டு அவர்களுக்கு தேர்வு முடிவுகள் வரும் வரை தொடர்ந்து ஆலோசனை வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக அமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்து கவர்னருக்கு மனு அளிப்பேன் - எடப்பாடி பழனிசாமி பேச்சு!