தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை! - that dengue cases maybe increasing in Tamilnadu

Dengue Fever: மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுவதன் ஒருபகுதியாக, அக்.11 தொடங்கி அக்.31 வரை நடத்தப்படும் பெண்களுக்கான மெமோகிராம் சோதனையை செய்துகொள்ளுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இனிவரும் 2 மாதங்களில் டெங்கு பாதிப்புகள் 1500 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 8:54 PM IST

சென்னை: சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று (அக்.19) 'உலக முதலுதவி தினம்' மற்றும் 'மார்பக புற்றுநோய்' விழிப்புணர்வு மாதம் கொண்டாட்டத்தை முன்னிட்டு, முதலுதவி கையேட்டினை வெளியிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'உலக விபத்து தினத்தை முன்னிட்டும், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கும் விதமாகவும் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விபத்துகள் ஏற்பட்டவுடன் செய்யப்படும் முதலுதவிகள் குறித்து விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், சென்னை சட்டக்கல்லூரி NSS மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், உலக விபத்து தினத்தின் கருப்பொருளாக குரல்களுக்கு அதிகாரமளித்தல், காயங்களை குணப்படுத்துதல் இந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

பெண்களுக்கு சிறப்பு மெமோகிராம் சோதனை:மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக இந்த அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு மெமோகிராம் (Mammogram) பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு அடங்கிய தகவல் விவரங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படவிருக்கிறது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் டெங்கு அறிகுறியுடன் 9 வயது சிறுவன் உயிரிழப்பு!

'டெங்கு பாதிப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் 7.000 முதல் 8,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக டெங்கு பாதிப்பு என்பது 2012 ஆம் ஆண்டில் 66 இறப்புகளும், 13,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இதன் பாதிப்புகளும் இருந்தன. அதன்பிறகு, அடுத்த அதிகபட்ச பாதிப்பு 2017ஆம் ஆண்டு 65 இறப்புகளும், 23,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்புகளும் இருந்தன. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக, 6,000 அல்லது 7,000 என்கின்ற எண்ணிக்கையில் டெங்கு பாதிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் இருந்து வந்தது.

கொசுக்களால் வரும் டெங்குவை ஒழிக்க நடவடிக்கை: டெங்கு பாதிப்பு, வரவே வராது என்று சொல்ல முடியாது. ஏனெனில், ஒவ்வொரு பருவமழைக்கும் ஆங்காங்கே தேங்கியிருக்கின்ற நன்னீரில் உருவாகும் 'ஏடிஸ் கொசுக்கள்' மூலம் இது வருகின்றது. வீடுகளைச் சுற்றி உடைந்த பானைகள், வாழை மட்டைகள், உடைந்த ஓடுகள், டயர், டியூப் போன்ற பல பயன்பெறாத பொருட்களில் தேங்கி இருக்கும் நீரில் கூட, ஏடிஸ் கொசு உருவாகி அதன்மூலம் இப்பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, இந்த பாதிப்புகள் இல்லாமல் ஏற்படுகின்ற விழிப்புணர்வை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ச்சியாக எடுத்து வருகின்றன' என்று கூறினார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், 'தொடர்ந்து கொசு ஒழிக்கும் நடவடிக்கைகளான கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற செயல்கள் உள்ளாட்சி அமைப்புகளால் தொடர்ந்து நடைபெறுகிறது. டெங்குவினால் ஏற்படும் உயிரிழப்பு என்பது அந்த நோயினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.

டெங்கு பாதிப்பால் 5 பேர் உயிரிழப்பு: இதனால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெறாமல் காலம் கடந்து மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு அவ்வப்போது இறப்புகள் நிகழ்கின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை, இதுவரை கடந்த ஜனவரி முதல் தற்போது வரை ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு 5,356 ஆகும். இன்றைக்கு சிகிச்சையில் இருப்பவர்கள் 531 பேர், நேற்றைய பாதிப்பு 43 பேர், இதுவரை டெங்குவினால் பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 என்ற அளவில் உள்ளது.

டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு:இதைத்தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 1,000 முதல் 1,500 வரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக வெப்பச்சலன மழை, கோடை மழை தொடர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தினால் நீர்த்தேக்கம் என்பது ஆங்காங்கே இருக்கிறது. இதனால், இந்த கொசு உற்பத்தி இருக்கிறது என்றாலும் அரசின் சார்பில் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதனால், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது' என விளக்கியுள்ளார்.

இதையும் படிங்க:அரசு மருத்துமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details