சென்னை:சென்னை மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான 'ஆனைப்புலி' மரத்தின் வரலாற்றுக் குறிப்பேட்டை நாளை முதலமைச்சர் வெளியிடவுள்ளார். தமிழ்நாட்டில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் இதுவரை 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில்' பயனடைந்துள்ளனர்.
நாளை சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 'மக்களைத் தேடி மருத்துவ மையம்' திறந்து வைக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் 'மக்களைத் தேடி மருத்துவ மையம்' திறக்கப்படும். மருத்துவமனைக்கு வரும் 30 வயதைத் தாண்டியவர்களுக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்களைக் கண்டறிவதற்கான சோதனை நடத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது.
தடுப்பூசி
காது கேளாதோர், பேச்சுத்திறனற்றோருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள நவீன கருவிகளை முதலமைச்சர் வழங்கவுள்ளார்.
தடுப்பூசி கேட்டு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 14 லட்சம் தடுப்பூசிகள் இன்று மாலை வரவுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில் 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீட் விவகாரத்தில் நிச்சயம் தமிழ்நாட்டிற்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு 2,410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். பருவமழைக்கு முன் கொசு ஒழிப்பு பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளோம்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 3 மடங்கு அதிகமாக டெங்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,733 நபர்கள் இதுவரைப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணி நியமனத்தில் முன்னுரிமை
அரசு வேலையில் மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சென்னையில் 200க்கும் கீழ் தான் கரோனா தொற்று உள்ளது. எனவே, கட்டுப்பாடு விதிப்பது சரியாக இருக்காது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஜெ. கொண்டுவந்த திட்டத்திற்கு மட்டுமே அடிக்கல் நாட்டிவரும் திமுக!'