சென்னை:தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் கர்ப்பகால நீரிழிவு நோய் செயல்பாட்டு வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு, மாவட்ட தாய்சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கான லேப்டாப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் மாவட்ட தாய்சேய் நல அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 1,807 ஊரக சுகாதார நிலையங்களுக்கும் மற்றும் 42 மாவட்ட தாய்சேய் நல அலுவலர்களுக்கும் தலா ஒரு லேப்டாப் என 1,852 அலுவலர்களுக்கு ரூ.15.92 கோடி மதிப்பீட்டில் வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.
இதன் மூலம் தாய்சேய் நல பாதுகாப்பு அலுவலர்கள் பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தைகளின் நலனினை கண்காணித்து எடை, BP, ஹீமோகுளோபின் அளவினை பதிவிடுவதற்கு பெரிய அளவில் பயன்படும். மேலும், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் ANM வழங்கும் அறிக்கைகளை ஆராய்ந்து பதிவேற்றுவதற்கும், கர்ப்பகால சேவை, பிரசவ கால சேவை, பிரசவ பிற்கால கவனிப்பு, குழந்தைகள் நலம் மற்றும் இறப்பு குறியீடுகள் போன்றவற்றை PICMEயில் பதிவு செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் உறுதுணையாக இருக்கும்.
கர்ப்பக்கால நீரிழிவு நோய் பற்றிய புதிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கான புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கர்ப்பகால கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், கர்ப்பகால நீரிழிவு நோயினால் சிசுவிற்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்ற பல்வேறு தகவல்களை ஆராய்ந்து எதிர்கொள்வதற்கு போன்ற மருத்துவச் சேவைகள் பல தகவல்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளடக்கியிருக்கிறது.
கர்ப்பகால நீரிழிவு நோய் கருவுற்ற தாய்மார்களின் உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. உலகளவில் கர்ப்பிணித் தாய்மார்களில் கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை ஆண்டொன்றிற்கு 9.25 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் இருக்கின்றனர். அவர்களில் 70,000 முதல் 1,00,000 பேர் வரை நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள கையேட்டை நோயாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழில் மிக விரைவில் வெளியிடப்படும்.