சென்னை:அறிஞர் அண்ணா இந்திய மருத்துவம் ஓமியோபதி மருத்துவமனை வளாகத்தில், 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பட்ட படிப்பு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ்.,பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ் மற்றும் பி.எச்.எம்.எஸ்) மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (நவ.17) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.
மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு ஆணை:தொடர்ந்து யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கி வைத்ததோடு, மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு ஆணை வழங்கினார். பின், இந்திய மருத்துவ துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரச் சான்றிதழ்களை அந்த நிறுவனங்களுக்கு அளித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பட்ட படிப்பு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ் மற்றும் பி.எச்.எம்.எஸ்) மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
மருத்துவக்கல்லூரிகளில் காலியிட நிலவரம்:தமிழ்நாட்டில் 5 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 280 இடங்கள், 26 சுயநிதி இந்திய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் 1660 இடங்கள் என மொத்தம் 1940 இடங்கள் உள்ளது. சித்தா மருத்துவப் பிரிவுக்கு மட்டும் 2 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 126 இடங்களும் 7.5 % இடஒதுக்கீட்டின் கீழ், 10 இடங்கள் என மொத்தம் 136 இடங்கள் அரசு கல்லூரிகளில் உள்ளது. 9 சுயநிதி இந்திய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் 7.5 % இடஒதுக்கீட்டின் கீழ், 19 இடங்கள், அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட 249 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 75 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், 147 இடங்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 490 இடங்கள் என மொத்தம் 626 இடங்கள் தமிழ்நாடு முழுவதும் சித்தா மருத்துவ b பிரிவு படிப்பிற்காக உள்ளது.
ஆயுர்வேதா மருத்துவப் பிரிவுக்கு மட்டும் 1 அரசு மருத்துவக்கல்லூரியில் 47 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இடஒதுக்கீட்டின் கீழ் 4 இடங்கள் என மொத்தம் 51 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ளது. 6 சுயநிதி இந்திய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் 7.5 % இடஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள், அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட 158 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், 47 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், 93 இடங்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 310 இடங்கள் என மொத்தம் 361 இடங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆயுர்வேதா மருத்துவப் பிரிவு படிப்பிற்காக உள்ளது.
மருந்துகளின் தரம் ஆய்வு: 2022- 23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு எண்.136-ன் படி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (மருந்து பகுப்பாய்வு கூடம்) பிரிவில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தினை ஆய்வு செய்வதற்கான பணி இன்று தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 5 தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மருந்துகளின் தரத்தினை ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.